பரோபகாரம் – பெரியவா அனுகிரகம்
என் கடன் பணி செய்து கிடப்பதே
‘எல்லா உயிர்களும் ஒன்றே; எல்லாவற்றிலும் ஈஸ்வரன் இருக்கிறான்’என்று ஒருத்தன் உணர்கிறபோது தான் அவனுக்கு அருள் உண்டாகிறது. இவன் தன் மநுஷ்யர்களுடன் ஸமமான நிலையில் இருந்துகொண்டு பிரியம் காட்டுவதைவிட இன்னும் ஒருபடி கிழே இறங்கி தன்னைக் குறைத்துக்கொண்டு, மற்றவனை ஈஸ்வரனாக நினைத்துதான் ஸேவை செய்கிறான். கொஞ்சங்கூட மமதையே இல்லாமல் ”நாம் பெரியவர், உபகாரம் பண்ணுகிறோம்” என்ற அகந்தையே இல்லாமல் இவன் ஸமஸ்தப் பிராணிகளிடம் ஈஸ்வர ஆராதனையாக அன்பைச் செலுத்துகிறபோது, அதுவே இவனை ஸகல பிராணிகளுக்கும் மேலே உயர்த்தி விடுகிறது. ஈஸ்வராநுக்ரஹத்தை வாங்கித் தரக்கூடிய அருட் சக்தியைப் பெற்றுவிடுகிறது. பரனுக்கு (பிறத்தியானுக்கு) இவனுடைய ஸேவை உபகாரமாக இல்லாவிட்டாலும்கூட, ஸ்வயமாக இவனுக்கே சித்த பரிசுத்தியை உண்டாக்குவதால், இதை ‘ஸ்வய உபகாரம்’ என்றுதான் சொல்லவேண்டும். இப்படியே இவன் ஸ்வய நலனைக் கொஞசம்கூட நினைக்காமல் பரோபகார ஸேவை செய்வதுதான் உண்மையில் ஆத்ம லாபம் என்கிற பெரிய ‘ஸ்வயோபகாரமாக’இருக்கிறது. பரம் என்கிற பேதமே இல்லாமல், எல்லாம் ஈஸ்வர ஸ்வரூபமாகப் பார்த்து, ஆனந்தமாகப் பணி செய்து கொண்டிருப்பான். ”என்கடன் பணிசெய்து கிடப்பதே” என்று அப்பர் ஸ்வாமிகள் சொன்னது இந்த நிலையில்தான். ”நம் கடன் பணிசெய்து கிடப்பதே” என்பதுதான் நம் வாழ்க்கையின் குறிக்கோளாக, Motto – வாக் இருக்க வேண்டும். லோகத்தில் இத்தனை ஜீவராசிகள், பசு பக்ஷிகள், தாவர வர்க்கங்கள் இருக்கிறோமே, இதில் ஒன்றுக்கொன்று வாழ்வுக்கு அவசியமானவைகளைப் பரஸ்பரம் கொடுத்துக் கொண்டுதான் ஜீவிக்கிறோம். இதிலே மநுஷ்யர்களான நாம், நம் போன்ற ஸஹ மநஷ்யர்களிடமிருந்தும், மிருகங்கள், பக்ஷிகள், தாவரங்கள், இன்னும் inanimate என்கிற ஜடவஸ்துக்களிடமிருந்துங்கூட எத்தனையோ உதவி பெறுவதால்தான் ஜீவ யாத்திரையை நடத்திக்கொள்ள முடிகிறது. இப்படி எல்லாரிடமும் உபகாரம் பெற்றுவிட்டு, மநுஷ்ய ஜன்மா எடுத்துள்ள நாம் பிரதி உபகாரம்பண்ணாமல் இருந்தால் பாபம் அல்லவா? ”நன்றி மறப்பது நன்றன்று”, ”எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” என்றெல்லாம் வள்ளுவர், இன்னும் மநு, வியாஸர் எல்லாரும் சொல்கிறார்களே! இது தவிர தாவரங்களுக்கு ஜலம் கொட்ட வேண்டும். மிருகங்களிடம் அன்பு பாரட்ட வேண்டும். அவற்றிக்குக் கொடுமை செய்யவே கூடாது. ”வாயில்லா ஜீவன்” என்றே அவைகளை ரொம்பவும் பரிவொடு சொல்வது வழக்கம். முன்காலத்தில் ஊருக்குள் மட்டுமின்றி, வெளியே மாடுகள் மேய்ச்சலுக்குப் போகிற இடங்களில் கூட அவற்றுக்கெனவே குளம் வெட்டி வைப்பார்கள். ஒரு பசுவுக்கு கழுத்திலே அரிக்கிறது. நம்மைப்போல் அதற்குக் கையா இருக்கிறது, சொரிந்து கொள்ள?” எனக்கு அரிக்கிறது” என்று சொல்ல அதற்கு வாய் கூட இல்லையே!அதன் கஷ்டத்தை உணர்ந்து, பசு சொரிந்து கொள்வதற்கென்றே அங்கங்கே கற்களை நாட்டி வைத்தார்கள். ”ஆதீண்டு குற்றி நிறுவுதல்’ ‘என்று இதை ஒரு பெரிய தர்மமமாக நீதி நூல்களில் சொல்லியிருக்கிறது. கடைசியில் நம் மாதிரியான மநுஷ்யர்களிடத்தில் வந்தால், ஸ்ருஷ்டியில் பாக்கியுள்ள அத்தனை ஜீவ இனங்களுக்கும் எத்தனை கஷ்டம் இருக்குமோ அத்தனையும் சேர்த்து வைத்து ஒவ்வொரு மநுஷ்யனுக்கும் இருக்கிறது! இது இவனுடைய அலாதி புத்தியினால் இவனே ஸம்பாதித்துக் கொண்டது
இது தவிரவும் வைத்தியசாலைகள், சிறைச்சாலைகள், ஏழை விடுதிகள், அநாதாசிரமங்கள், விதவா இல்லங்கள், பிச்சைக்காரர் விடுதிகள் முதலியவற்றைப் போய்ப் பார்த்தால் தெரியும், மநுஷ்யர்கள் எத்தனை தினுஸான கஷ்டங்களுக்கு ஆளாகிறார்கள் என்பது. இவற்றை ஸாதாரண ஜனங்களான நாமும் ஓரளவுக்குத் தீர்த்து வைக்கமுடியும்.
நம் போன்றவர்களின் உபகாரத்தைக்கூட ஈஸ்வரன் எத்தனை ரூபங்களில் வந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரியும்.
நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், துக்கம் எங்கே உண்டோ, அங்கே நாம் வலுவில் போய், அந்த துக்க நிவிருத்திக்கு நம்மால் ஆகக்கூடியதையெல்லாம் பண்ண முயலுவதேயாகும். பணத்தாலோ, சரீரத்தாலோ, வாக்காலோ நம்மால் முடிந்த உதவியைப் பண்ண வேண்டியது நம் கடன், கடமை,இதைத்தான் தர்மம், அறம் என்று சொல்வது.
‘’ஒவ்வொருவரும் தம் நிலையில் தம் வருமானம், குணம், சரீர வசதி, ஆற்றல் இவைகளுக்கு ஏற்றபடி எவ்விதங்களில் பரோபகாரம் செய்ய முடியுமோ அப்படி எல்லாம் செய்ய வேண்டும். உடம்பிலே எந்த அவயத்துக்கு துன்பம் வந்தாலும் கண் அழுகிறதல்லவா ! அதே போல் உலகத்தில் எங்கே யாருக்குத் துன்பம் உண்டானாலும் நாம் மனம் கசிந்து ஒவ்வொருவரும் நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டியது நம் கடமை. இதில் பெருமைக்காக செய்வது செய்வது ஏதுவும் இல்லை, பிறத்தியாரின் வற்புறுத்தலுக்காகவும் செய்ய வேண்டியது இல்லை. லோகம் முழுக்க பகவத் ஸ்வரூபம் என்று மனசில் வாங்கிக் கொண்டால் தன்னால் ஸ்வபாவமாக பிறர் துயரத்தை நிவ்ருத்தி செய்வதில் ஈடுபடுவோம். இதிலேயே நமக்கு சிரமம் வந்தால் கூட அது சிரமமாகவே தெரியாது எத்தனை தியாகம் செய்தாலும் அதுவே பரமானந்தமாக இருக்கும்.’’
ஸ்ரீமஹாபெரியவா – தெய்வத்தின் குரல் : பாகம்-3
Temple Request
Support the Temple, Preserve the Dharma
Sri Mangalyam Request
Sri Mangalyam – Blessings for Auspicious Beginnings
2026 Periyava Calendar
2026 Periyava Calendar – Anugraham for Every Day