Shree Mangalaya Kainkaryam
ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம்
ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவா அனுக்கிரத்தில் நாம் பல கைங்கர்யங்களை நடத்தி கொண்டு இருக்கிறோம்..எந்த ஒரு செயலானாலும் ஸ்ரீமஹாபெரியவா உத்தரவாக கொடுத்தால் நாம் அதை செயல்படுத்துவோம்.இல்லையேல் நாம் அதை செய்வதில்லை அது எந்த ஒரு காரியமானாலும் அப்படியே.
ஒருநாள் பெரியவா பக்தர் ஒருவர் போன் செய்து என் மகளின் திருமணம் வைத்துள்ளேன். அவள் திருமணத்தை நல்ல முறையில் செய்திட என்னிடம் பணவசதி இல்லை. என் மகளின் திருமணத்திற்கு உதவ வேண்டும் என்றார். பொதுவாக நம்மிடம் ஒரு விண்ணப்பம் வருகிறது என்றால் அது மஹாபெரியவா நமக்கிட்ட ஆக்னையாக கொண்டே செயல்படுவோம்..
மேலும் நாம் பல கைங்கர்யங்கள் செய்து வருகிறோம் ஆனால் திருமணத்திற்கு என எதுவும் செய்திடவில்லை இதுவே முதல் விண்ணப்பம்.
மறுநாள் பூஜையை முடித்து பெரியவாவிடம் அமர்ந்து இதை பற்றி மனதில் நினைக்க ‘’ஸ்ரீமாங்கல்யம்’’ கொடுக்கலாம் என மனதில் உத்தரவு. சரி பெரியவா உத்தரவு அப்படியே செய்வோம். ஆனால் உதவி கேட்டவர் ஸ்ரீமாங்ல்யம் என கேட்கவில்லையே எப்படி நாம் ஸ்ரீமாங்கல்யம் தான் தருவோம் என சொல்வது, அவர் ஸ்ரீமாங்கல்யம் தயார் செய்து இருந்தால் நாம் எப்படி பெரியவா உத்தரவை மீறி வேறு கொடுப்பது, என பல யோசனையுடன் , உதவி கேட்டவரிடம் என்ன மாதிரி உதவி தேவை என கேட்டோம், அவர் சொன்ன முதல் வார்த்தையே நிங்க ஸ்ரீமாங்கல்யம் தருவீங்க என என் நண்பர் சொன்னார் , ஸ்ரீமாங்கல்யம் கிடைத்தால் போறும் என்றார்.
‘’ஒரு நிமிடம் எம்மையும் அறியாமல் கண்ணிர் வந்து விட்டது. ஆம் நாம் இதுவரை யாருக்கும் ஸ்ரீமாங்கல்யம் கொடுக்கவில்லை பின் எப்படி அவர் நாம் ஸ்ரீமாங்கல்யம் கொடுக்கிறோம் என சொல்லி இருப்பார்.’’
மஹாபெரியவாவும் ஸ்ரீமாங்கல்யம் கொடு என உத்தரவிடுகிறார். உதவி கேட்ட அன்பரும் நீங்கள் ஸ்ரீமாங்கல்யம் கொடுப்பீர்கள் என்கிறார், அது தான் மஹாபெரியவா , ஒரு கைங்கர்யத்தை செய்ய வேண்டும் என்று பெரியவா முடிவு செய்து விட்டார். அதை நம் மூலம் நடத்தி கொள்கிறார், அதுவே நம் பாக்கியம்.
இந்த உலகில் யாரெல்லாம் அவரது பாதத்தை பற்றி தன் குறையை கஷ்டத்தை சொல்லி மன்றாடுகிறார்களோ அடுத்த நொடியே அதனை தீர்த்து, நான் உன் கூட இருக்கிறேன் என கருணை செய்யும் மஹாதெய்வம் நம் பெரியவா.
சரி ஸ்ரீமாங்கல்யம் கொடுக்க வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமே. அதையும் அவரே செய்வார் என இருந்தோம். ஆம்! அதன்படி அதையும் செய்தார் மஹாபெரியவா ! ஏனெனில் இந்த கைங்கர்யங்கள் எதையும் நாம் செய்யவில்லை அவரே தான் செய்து கொண்டு இருக்கிறார் நாம் ஒரு கருவியாக செயல்பட்டு கொண்டு இருக்கிறோம் அவ்வளவே. அடுத்த நாள் நம் கைங்கர்யத்தில் உள்ள பத்மினி மாமி போன் செய்தார் நம்மிடம் ஏதாவது ஒரு கைங்கர்யத்திற்கு பணம் கொடுக்க வேண்டும் எப்படி அனுப்ப வேண்டும் என்றார். நாம் ஸ்ரீமாங்கல்யம் தர இருப்பதை சொன்னோம் அடுத்த நிமிடம் அவர் மிகுந்த சந்தோஷத்துடன் நானே ஸ்ரீமாங்கல்யம் வாங்கி தருகிறேன், ஏற்கனவே நான் பெரியவாவிடம் ஸ்ரீமாங்கல்யம் தருவதாக பிரார்த்தனை வைத்து இருந்தேன் ஆகவே இந்த ஸ்ரீமாங்கல்யம் நானே தருகிறேன் என மிகவும் உற்சாகமாக எதோ நீண்ட நாள் கிடைக்காத ஒரு பொக்கிஷம் கிடைத்தை போல ஆனந்தமடைந்தார்.
ஒரு நிகழ்வால் ஒருவரின் பிரார்த்தனையையும் ஒருவரின் தேவையையும் பூர்த்தி செய்யும் தெய்வீக சங்கல்பம் இதற்கு நாமும் ஒர் துளியாக இருப்பதே பெரும் அனுக்கிரகம், இது தான் மஹாபெரியவா அற்புதம்.
ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்தால் அவர்களின் முறைபடி ஸ்ரீமாங்கல்யம் தயாராகி விட்டது எப்படி, எங்கே வைத்து கொடுப்பது? என மாமி கேட்க , இதை ஏற்பாடு செய்து யார் பெரியவா ஆச்சே அப்ப அவரிடம் தான் கொடுக்க வேண்டும். ஆக ஸ்ரீமடத்தில் பெரியவா அதிஷ்டானத்தில் வைத்து கொடுத்து விடலாம்..எப்போது கொடுக்கலாம் என்றால் ? நமெக்கெல்லாம் ஒரே புண்ணிய தினம் அனுஷம் ஆயிற்றே அனுஷதன்றே கொடுப்பது என திர்மானித்தோம்.. இல்லை அவர் நம்மை இப்படி திர்மானிக்க வைத்துள்ளார். அதன்படியே காஞ்சிபுரம் ஸ்ரீமடம் சென்றோம். தானம் கேட்டவரையும் காஞ்சிபுரம் வர சொல்லி ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடனும் ஸ்ரீசங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்– பாலபெரியவா அனுக்கிர ஆசியுடன் அவர்களிடம் ஸ்ரீமாங்கல்யம் வழங்கினோம்.
ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடனும் ஆசியுடனும் அவர்களது மகள் திருமணம் கடந்த மார்ச் 13.03.2020 சிறப்பாக நடந்தேறியது.
ஸ்ரீமாங்ல்ய கைங்கர்யம் சிறப்பாக நடைபெற்றது.. அடுத்த அனுஷ பூஜையின் போது ஸ்ரீமாங்கல்ய தானம் மாத மாதம் கொடுக்க பெரியவா உத்தரவா நம் பக்தியின் தோன்றலா தெரியாது, அவர் உத்தரவாக தான் இருக்கும், பெரியவா சொன்னால் பின் நாம் ஏன் அதை பற்றி கலங்க வேண்டும். உடனடியாக அனைவரிடமும் பேசினோம். நல்லது செய்வோம் என முடிவு எடுத்தோம். ஆனால் ஒவ்வொரு மாதமும் 1/2 பவுன் தங்கம் கொடுக்க வேண்டுமே. ஸ்ரீமாங்கல்யம் வழங்கிறோம் என சொன்னால் சிரமபடும் பலர் கேட்பார்கள் தொடர்ந்து கொடுக்க இயலாமல் போனால் என்ன செய்வது என தயக்கம். இருப்பினும் இதை செயல்படுத்தி கொண்டு இருப்பது பெரியவா ஆச்சே நாம் ஏன் தயங்க வேண்டும் என முடிவு செய்து ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரத்துடன் குழுவில் பதிவிட்டோம்..
ஒரு சிலரை தவிர யாரும் ஒன்றும் சொல்லவில்லை. என்ன செய்வது நாம் வேறு மாத மாதம் ஒரு ஸ்ரீமாங்கல்யம் தானம் கொடுப்பதாக சொல்லி விட்டோம் எப்படி முடியும்.. இதனால் யாருக்கும் வருத்தம் கூடாது. தருகிறேன் என்று சொல்லி விட்டு கொடுக்கவில்லை எனில் பாவம் வந்து சேருமே என்ன செய்வது பெரியவா என்று சில நாட்களாக குழப்பம். நிறுத்தி விடலாமா என யோசனை. அடுத்த நாள் 22.05.2020 அமாவாசை அன்றைய தினம் காலை எழுந்ததும் மொபைலில் ஒரு பெரியவா படம் வந்தது அதில் பெரியவா படத்திற்கு கீழ் ஒர் வாசகம்.
‘’எடுக்க நினைத்த முயற்சியை ஒருபோதும் கைவிடாதே உன்னோடு நான் இருக்கேன்”
பரமாச்சார்யாள் நேரில் வந்து சொன்னது போல் இருந்தது.. நம்முள் இருந்த குழப்பம் அனைத்தும் தீர்ந்தது.. இதற்கு மேல் என்ன வேண்டும் ஸ்ரீமஹாபெரியவாவே வந்து சொன்ன பின் நாம் தயங்கலாமா ? உடனே எந்த குழப்பமுன்றி ஸ்ரீமாங்கல்யம் கைங்கர்யம் பற்றி நம் ஸ்ரீகாஞ்சி மஹாபெரியவா குழுவில் பதிவிட்டோம்..
என்ன ஆச்சர்யம் அற்புதம் ஆம் எப்படி சொல்வது ஸ்ரீமஹாஸ்வாமிகளின் அற்புதத்தை அடுத்த சில நிமிடங்களில் அடுத்த இரண்டு வருடத்திற்கு 2022 வருடம் முழுவதும் கூட ஸ்ரீமாங்கல்யம் வழங்கிட பக்தர்கள் முன்பதிவு செய்து விட்டார்கள். இது தான் நம் கருணை தெய்வம். இதற்காகவாக நாம் இத்தனை நாள் தயங்கினோம், நம்மை கொண்டு இதை செய்திட தூண்டியது பெரியவா ஆயிற்றே என நமக்கே சற்று வருத்தமாக இருந்தது. இது போன்று எத்தனையோ அற்புதங்கள் செய்தும் நாம் அவரை இன்னும் முழுதாக ஏற்கவில்லையோ என மிக வருத்தமாகவே இருந்தது.
2020 வருடம் அனுஷத்தில் துவங்கிய ஸ்ரீமாங்கல்ய கைங்கர்யம் ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிர ஆசிர்வாத்துடன் தற்போது 2024 ம் ஆண்டு ஜீன் மாதம் வரை சுமார் 121 க்கும் மேற்பட்ட ஏழை பெண்களின் திருமணத்திற்கு ஸ்ரீமாங்கல்யம் வழங்கி இருக்கிறோம். மாதம் ஒரு ஸ்ரீமாங்கல்யம் என்றது போக தற்போது மாதம் 3 ,4 என கொடுக்கும் அளவிற்கு பெரியவா அனுக்கிரகம். அனுஷம் என்றால் அன்று காலை ஸ்ரீமடத்தில் ஸ்ரீமாங்கல்யம் கொடுப்பார்கள் என்று ஆகிவிட்டது. ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரம்.
ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து வழங்க இயலுமா என யோசித்ததற்கு இன்று ஸ்ரீமாங்கல்யம் வழங்கிட பெரியவா பக்தர்கள் 2027 ஆம் ஆண்டு வரை முன்பதிவு செய்துள்ளார்கள்.
நாம் ஒவ்வொருமுறையும் சொல்வது போல் இந்த கைங்கர்யங்கள் அனைத்தும் நாம் நடத்தவில்லை நம் கருணாமூர்த்தி ஸ்ரீமஹாபெரியவா தான் நடத்தி கொண்டு இருக்கிறார்.